கார்முகில் சரிந்ததோ… காரிகை கூந்தலில்?

கார்முகில் காரிகை கூந்தலில்

கார்முகில் சரிந்ததோ… காரிகை கூந்தலில்

தேனினிக் கடைக்கண்ணில் அமுதமும் ஊறுதோ… 

அலையெழும் கூந்தலின் வாசம் – இதில் 

அவிழும் என்போதை யாவும்! 

 காரிருள் காடெனக் கவிழ்ந்ததோ உன்கூந்தல்

தாரகை மிளிருதோ தவழும்நல் முகத்தினில்

 

ஞான்றிய பூங்குழல் சரிந்திடும் பொழுதினில் 

ஏங்கிய இதயத்தில் புயலொன்று எழுமே! 

நெளிந்தோடும் கூந்தலின் வழியினில் வழிமாறி 

தொலைந்தேனடி… உன் வாசலில்! 

 

நீள்துகில் தொட்டிடும் நீல நறுங்குழல் 

நாணத்தில் வளைந்திடும் கார்முகில் குழலொளி! 

பூவினும் மெல்லிய பூங்குழல் வீச்சினில் 

தேவனும் நிலைகுலைந்தே தோற்பானடி! 

 

அளிசூழ் மலரென நெளிந்திடும் குழலினில் 

வளிவந்து உரசுகையில் இசைவரும் செவியினில்! 

மயில் தோகை எனச்சாயும் கூந்தலின் வீச்சில் 

என் ஆயுள் முழுதும் சிறைப்படுவேனடி! 

 ஏகலைவன் 

 

'கார்முகில் சரிந்ததோ... காரிகை கூந்தலில்? ' என்ற தலைப்பில் ஏகலைவன் எழுதியுள்ள இப்பாடல், நீல மேகம், காரிருள் காடு, மயில் தோகை எனப் இயற்கை எழிலோடு உவமித்து எழுதப்பட்டுள்ளது

சொல் விளக்கம்

  • கார்முகில்கறுத்த மேகம்
  • ஞான்றியதொங்குகின்ற / சரிந்த
  • பூங்குழல் – பூக்கள் சூடிய கூந்தல்
  • நீள்துகில்நீண்ட ஆடை
  • அளிசூழ்வண்டுகள் சூழ்ந்த
  • வளிதென்றல் காற்று